97

பெண் உரிமை

வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

அன்றியும், மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் நமது தோழர் குறிப்பிட்ட இருபாலார் குணங்களும் சமமாய் இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும். இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது. ஆனால், அது செயற்கையால் - ஆண்களின் சுயநலத்தால் - சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.