இந்தக் காதலென்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், "காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல" என்றும், "அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு" என்றும், "அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்" என்றும், "அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும்,
"அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்" என்றும், அந்தப்படி "ஒருவரிடம் ஒருவருக்குமாக - இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது" என்றும், "பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டு விட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது" என்றும், மற்றும் "ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ ஏற்படாது" என்றும் சொல்லப்படுகின்றன.
மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானமுமில்லாதவர்களென்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும், அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டியிருக்கின்றது.