உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.
எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய, நிர்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதனுடன், அடிமைக் கற்பையும், நிர்ப்பந்தக் கற்பையும் தான் காணலாம். அன்றியும், இம்மாதியான கொடுமையைவிட வெறுக்கத்தக் காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது.