சமுதாய நலம் கொண்ட மக்கள் சமூகம்தான் முற்போக்கும் மேன்மையும் அடைகிறது.
நம் நாட்டில் பார்ப்பனருக்கும் முஸ்லீம்களுக்கும் தான் அவரவர்கள் சமுதாய நலத்தில் கவலையும் கடமையாய்க் கருதும் தன்மையும் இருந்து வருகிறது. நம் திராவிட சமுதாயத்திலோ ஆதிதிராவிட சமுதாயத்திலோ அவை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவ்விரு கூட்டத்தாருக்கும் தங்கள் சமுதாயம் எப்படிப்பட்டது? எது? என்பதே தெரியாமல் போய்விட்டது. ஆதிதிராவிடர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் தங்கள் இனத்திலேயே ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாத, சம்பந்தமில்லாத பல ஜாதிகளாகப் பிரிந்து போய்விட்டார்கள். திராவிடர்கள் என்பவர்களும் தங்களில் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாத, ஒருவரை ஒருவர் தொடாத கொடுக்கல் வாங்கல் இல்லாத அநேக ஜாதிகளாய்ப் போய்விட்டார்கள். இவர்களுக்கு மதம் (அதாவது ஒரு கொள்கை) இல்லை. ஜாதி (இன உணர்ச்சி) இல்லை. மதமோ ஜாதியோ இல்லாத மக்கள் அதாவது சமுதாயக்கூட்டுக் கொள்கையோ இனப்பற்றோ இல்லாத மக்கள் மிருக பிராயத்திலோ காட்டுமிராண்டித் தன்மையிலோ பட்டவர்களாவார்கள். இதனால்தான் நாம் நம்மைப் பார்ப்பனரல்லாதவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறோமே ஒழிய, தமிழர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறோம்.