தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பது தான் தருமம் என்று பார்ப்பான் மனு தருமத்தில் எழுதி வைத்திருக்கிறான்.
உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுகிறது. ஆகாயத்திலே சந்திரமண்டலம் வரையில் மனிதன் பறந்துச் சென்று வருகிறான். தந்தி பறக்குது. அமெரிக்காவிலே பேசினால் இங்கே கேட்குது. கேட்பது மட்டுமல்ல. பேசுகின்ற மனிதனையும் நாம் நேரே பார்க்கலாம் டெலிவிஷன் மூலம்!
இத்தகைய அதிசயங்களை எல்லாம் கண்டுப் பிடித்து ஆராய்ந்து முன்னேறும் போது நாம் என்னடாவென்றால் சுத்தக் காட்டு மிராண்டிகளாக மாட்டையும், கழுதையையும், குரங்கையும், கல்லையும், கடவுள் என்றும் அந்த சாமிக்கு கல்யாணம், எத்தனை பிள்ளை, அதற்கு இத்தனை பூசை செய்தால் மோட்சம் என்று ஆராயும் முட்டாள்தனமான காரியத்தில் உச்சநிலையில் இருக்கிறோம்.
குழவிக்கல் சாமி. அதற்கு தினம் ஆறு வேளை-12 வேளை சோறு. வருஷா வருஷம் கல்யாணம். இதுவும் பத்தாமல் வைப்பாட்டி வேறு. அதற்குக் கருமாதி வேறு! நகை, கோயில் இப்படி அனேகம் செய்கிறோம். இதைப் பற்றியெல்லாம் ஒருவராவது சிந்திப்பது இல்லை. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவை எவனும் உபயோகப்படுத்துவதே இல்லை.
(14-06-1962 அன்று வல்லம் படுகையில் நடைப்பெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 23-06-1962 , 24-06-1962 , 25-06-1962)