இன்று ஆகாய கப்பல்களும், கம்பியில்லா தந்தியும், ரேடியோவும் வந்து நம்மை அதிசயப்படுத்துகிற சமயத்தில், நாம் தேர் திருவிழாவும் கும்பாபிஷேகமும் செய்கிறோம். 20-மணி நேரத்தில் அமெரிக்கா போகிறான். ஆனால், நாம் கட்டை வண்டி கட்டிக் கொண்டு பிரயாணம் செய்கிறோம்.
இன்று நமக்கு இவற்றின் பேரால் அறிவு மட்டும் கெட்டுப் போவதில்லை. ஏராளமான பணமும் பாழ் செலவு செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் இந்த கடவுள்களால்
வரும்படி வருகிறதெனப் பாருங்கள். திருப்பதி கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 40-லட்சம் ரூபாய் வரும்படி இதையெல்லாம் அனுபவிப்பவர்கள் யார்? மதுரை
கோவிலுக்கு 7, 5-லட்ச ரூபாய் வரும்படி; இதையெல்லாம் யார் உண்டு கொழுக்கிறார்கள்? சிறீங்கத்துக்கு 10-லட்சம் ரூபாய் வரும்படி. இதையெல்லாம் யார் மோசடி செய்கிறார்கள்? இவை மக்களுடைய முன்னேற்றத்திற்கு
உபயோகப்படுத்தப்படுகிறதா? பின் எங்கே போகிறது? பாழும் மதில்களைக் கட்டுவதற்குச் செலவு செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் தொந்தி நிரம்புகிறது.
இந்தப் பாழாய்ப் போகும் பணத்தில் ஒரு பகுதியை மக்கள் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான ஸ்தாபனங்கள் ஏற்படுத்த, அறிவு ஊட்டும் அலுவலகங்களைச் செய்யும்படி
செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?