24

"கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்" என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். "காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்" என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது? என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்? - "குடிஅரசு" - 1947