தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள். மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள். ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள். நாய்களால் காக்கப்படுகிறார்கள். கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோ ஜீவன்களால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை.
அப்படித்தான், மனித ஜீவனும், பல வழிகளில் பல காரணங்களால், வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான்.
தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு, எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன் தான் மற்ற ஜீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது.
- [திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில் 1945-மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரியாரின் சொற்பொழிவு - ‘குடிஅரசு’ 14.04.1945]