83

"நாட்டில் பள்ளிக் கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எத்தனை இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும், ஒரு கட்டுப்பாட்டுக்கு, ஒரு வரம்புக்கு, அடங்கியவை. இன்ன இன்னவைதான் சொல்லிக் கொடுக்க வேண்டும் இன்ன இன்னவைதான் பாடத் திட்டத்தில் இருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு.

இத்தகைய ஸ்தாபனங்களில் (நிறுவனங்களில்) படிப்பின் பயன் எல்லாமே ஏற்பட்டுவிடாது. இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவது இத்தகைய படிப்பகங்களே ஆகும். இங்கு எல்லாக் கருத்துகளையும் கொண்ட அறிவு நூல்கள், எல்லாக் கருத்துகளும் கொண்ட பத்திரிகைகள், எல்லா கருத்துக்களையும் கொண்ட உலகச் செய்திகள், பெரியவர் - அவர்களுடைய கருத்துகள் தாரளமாக இருக்கும்; அல்லது இருக்க வேண்டியது படிப்பகத்திற்கு மிகமிக அவசியமாகும் (கட்டாயத் தேவை ஆகும்.)

சுருங்கச் சொன்னால் படிப்பகங்களை ஒரு சர்வகலாசாலை (பல்கலைக் கழகம்) என்றே கூறலாம். இங்கு மக்கள் அதிகமாக வந்துப் படிக்கும்படிப் படிப்பகத்தார்கள் அக்கறை எடுத்துக் கொண்டு கவர்ச்சிகரமாக செய்ய வேண்டும். இப்படி இருக்குமானால் நம்முடைய காட்டுமிராண்டித்தனம், முரட்டுப் பிடிவாதம், தான்தான் உயர்வு என்கிற ஆணவம் இவை சீக்கிரம் மாற்றம் அடையும்."

- [பெரியார். - ´விடுதலை´, 08.01.1961]