காந்தியாரும் செல்வாக்குள்ள சில வார்த்தைகளைச் சொல்லிவிடுவதால், அதாவது, சத்தியம், அஹிம்சை, நீதி, சமாதானம் என்ற வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலமும், அது கெட்டிக்காரத்தனமாய் விளம்பரம் செய்யப்படுவதன் மூலமும் இந்திய அரசியலில் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டதால் அவர் நடத்தையின் பயனாய் நாட்டில் அரசியல் துறையில் ஏற்படும் பொய் பித்தலாட்ட நாணயக் குறைவான காரியங்களுக்கும், ஏமாற்று வஞ்சகங்களுக்கும், அடிதடி, கொலை, கொள்கை, நாசவேலைகளுக்கும் மற்றும் அட்டூழியங்களுக்கும் சமாதானக் கேடான குழப்பங்களுக்கும் அவர் சிறிதும் சம்பந்தப்படாதவராய் பொறுப்பு ஏற்கப்பட வேண்டாவராய்த் தப்பித்துக் கொள்ளுகிறார்.
இதுபோலவே சில செல்வாக்குள்ள வேஷம், பதவி ஆகியவைகளாலும் தாங்கள் எவ்வளவு அயோக்கியத்தனம் அட்டூழியம் செய்தாலும் பல சாமியார்களும், குருமார்களும், பண்டார சன்னதிகளும், மடாதிபதிகளும், ஆச்சாரியார்களும், மதிக்கப்படத்தக்கவர்களாகவும், பூசிக்கப்படத்தக்கவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். -[பெரியார், 22.02.1947