30

இந்தியன் ஒருவன் மலங்கழிக்கவிருந்தால் தண்ணீர் விட்டு தேய்த்துக் கழுவதுதான் சுத்தமாகக் கருதப்படும். ஆனால் ஒர் வெள்ளைக்காரன் மேல்நாட்டில் மலங்கழித்தால், காகிதத்தை வைத்து துடைப்பதுதான் சுத்தமெனக் கருதப்படும். அவன் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்திக் கொள்வதற்குச் சிறிதும் இயலாது. காரணம் அவனுடைய தேசத்தின் சீதோஷ்ணம் மிகவும் குளிர்ச்சி. அதுவுமன்னியில் அவனுடைய உடை தண்ணீர் விட்டு
சுத்தப்படுத்துவதற்கு இடங்கொடுக்காத நிலையில் ஓர் தடையாகவுமிருக்கிறது.ஒவ்வொரு காரியமும் இடத்திற்குத் தகுந்தபடி, தேசவர்த்தமானத்திற்குத் தக்கபடி நடை நடைபெறுமேயல்லாமல் வேறல்ல.

அதைப்போலவே மதமும் கால, தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடிஏற்படுத்தப்பட்டது. அந்த மதம் இப்பொழுதுள்ள கால, தேச, வர்த்தமானத்திற்கு அவசியமா? அல்லது அதை சீர்திருத்த வேண்டுமாவென்பதை ஆராய்ந்து தக்கன செய்ய வேண்டுமெயல்லாது அது எங்கள் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. அதைஒன்றுஞ் செய்துவிடக் கூடாது என்று சொல்லுவது அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.

- (திருநெல்வேலி மாவட்டம் சுயமரியாதைத் தொண்டர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 27.07.1929- "திராவிடன்" இதழில் வெளியானது)